Tuesday, 12 November 2013

குஜராத்தின் அசிங்கமான யதார்த்தம்

“கடுமையான தீண்டாமையையும், சாதிய ஒடுக்குமுறையையும் சந்தித்துவரும் பால்மீகி சமூகத்தின் உண்மையான பிரச்சனைகளை திசைதிருப்புவதே குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் “தலித்-பூசாரி” (கொள்கையின்) திட்டத்தின் நோக்கமாகும். சாதிப்பாகுபாடு குறித்தும் வரலாற்று ரீதியாக தலித்துகளுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்தும் மோடி அரிதாகவே பேசியிருக்கிறார். எனவே இத்திட்டம், (தன்னைப்பற்றி) நேர்மறையான செய்திகளை உருவாக்கும் பொருட்டு நடத்தப்படும் அப்பட்டமான கபடநாடகமேயன்றி வேறில்லை.”


ஒளிரும் குஜராத்தைப் பற்றி ஊடகங்களில் அதிகம் எழுதப்பட்டிருக்கிறது, தற்பொழுதைய நேரமோ அதன் சமூகப் “புரட்சியைக்” கட்டவிழ்க்கும் தருணமாகும்.  அதாவது, ‘இந்து இதயங்களின் பேரரசனான மோடி’ தலித் மக்களுக்கு திருமணம், பிறந்தநாள் விழா அல்லது கோயில்களில் செய்யப்படும் சடங்கு முறைகளை பயிற்றுவிக்கும் தனது திட்டத்தைத் தொடங்கியிருக்கிறார். இத்திட்டத்திற்காக இவரது அரசு 22.50 இலட்சங்களை ஒதுக்கியிருக்கிறது. இதன் மூலம், குறிப்பாக பால்மீகி சமூக மக்களுக்கு ‘சமஸ்கிருத அறிவு’ வழங்கப்படும். இதன் விளைவாக, அம்மக்கள், சடங்குகளைத் தன்னிச்சையாக செய்து கொள்ள முடியும். இம்மாணவர்களுக்கு, சோம்நாத் சமஸ்கிருத வித்யபீடம் உள்பட இரண்டு பல்கலைக்கழகங்களில் சடங்கு செய்யும்முறை பயிற்றுவிக்கப்படும். கோடிகளில் சலுகைகள் வழங்கப்படும் குஜராத்தில்,, ‘இச்சமூகப்புரட்சிக்காக’ ஒதுக்கப்பட்டிருக்கும் சொற்பத்தொகை, இதற்கு பின்புலமாய் இருப்பவர்களின் உண்மையான நோக்கங்களை வெளிப்படுத்துவதோடு நில்லாமல், இவர்கள் தங்கள் முயற்சியில் எவ்வளவு தீவிரமாய் இருக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது. இம்முயற்சிகள் சமுதாயத்தில் சமத்துவத்தை உருவாக்கும் பொருட்டு செயல்படுத்தப்படுகிறதா? அல்லது கையால் மலம் அள்ளுபவர்களான பால்மீகி சமூகத்தை பரந்துபட்ட இந்துப் படிநிலையில் இன்னும் அதே நிலையில் தக்கவைப்பதற்காக செயல்படுத்தப்படுகிறதா?

நரேந்திர மோடி மற்றும் அவரது அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட இந்நடவடிக்கைகள், அவருடைய கூட்டாளிகளால் புரட்சிகரமான நடவடிக்கைகள் என்றும்  சீர்திருத்த நடவடிக்கைகள் என்றும் விதந்தோதப்படுகிறது.  சிலர், மோடி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் ஆகையால் இந்நடவடிக்கைகள், அனைத்து தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை மிகுந்த மரியாதையுடனும் கௌரவத்துடனும் இந்து எனும் ஒரே குடைக்குள் ஐக்கியப்படுத்தும் மாபெரும் முயற்சி என்று கூறுகின்றனர். மோடி, வால்மீகி மக்களின் கூட்டத்தில் பேசிய பொழுது அவர்களை ‘நமது நகரத்தின் பூசாரிகள்’ என்று வர்ணித்தார்.

“நீங்கள் நமது நகரங்களை சுத்தமாக வைத்திருக்கிறீர்கள். ஆகையால் நீங்கள் பூசாரிகளுக்கு  குறைந்தவர்கள் அல்லர்” எப்பேர்பட்ட வார்த்தைகள் () இவை !! நாளைய இந்தியாவின் பிரதமராக வர்ணிக்கப்படும் மோடி, இப்பொழுது “சமூக சீர்திருத்தப் பாதை”யில் இருக்கிறார் ! மோடி ஏற்கனவே, ஆதிவாசிகளுக்காக ‘சபரி மேளா’ திட்டத்தைச் செயல்படுத்தியவர். தற்பொழுது இந்த தலித்-பூசாரி திட்டத்தால் பால்மீகி மக்களை இந்து படிநிலையில் தக்கவைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இத்திட்டத்தின் மூலம் தலித் பிரச்சனைகளில், குறிப்பாக, குஜராத்தில் கையால் மலம் அள்ளும்  தொழிலாளர்களின் (தமிழகத்தில், ஆதிக்க சாதிகள் இவர்களை தோட்டி என அழைப்பர்) பிரச்சனைகளில், அம்மாநில அரசின் அப்பட்டமான செயலற்றதன்மையின் காரணமாக, அரசுக்கெதிராக எழும் அம்மக்களின் கோபங்களை தணியவைக்க முயல்கிறார்.

1992 முதல், குஜராத் அரசாங்கம், மாநிலத்தில், கையால் மலம் அள்ளும்  தொழில் முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக அறிவித்தது. சாதிய அமைப்பும் தீண்டாமையும்  ஒன்றோடொன்று பிண்ணிப்பிணைந்தவை. எனவே, குஜராத்தை மோடி ஆண்டாலும் சரி காந்தி ஆண்டாலும் சரி, குஜராத்தில் சாதிய அமைப்பு இல்லை என்றோ தீண்டாமை இல்லை என்றோ யாராலும் கூற முடியாது. இந்து-முஸ்லீம் பிரச்சனைகளுக்கு மத்தியில் குஜராத்தின் நகரங்களில் உள்ள, மேற்ச்சொன்ன அருவறுக்கத்தக்க உண்மைகளை மறைப்பதில் குஜராத்  வெற்றிகண்டது. குஜராத்தின் சாதி சமூகம் இன்றளவும் வலிமையானது என்பது சுலபமாக மறக்கப்பட்டது  அது, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் வாழ்க்கை மாற்றத்தை, எப்பொழுதெல்லாம் இம்மக்களின் உரிமைக்கும் கண்ணியத்திற்கும் உறுதிகள் ஏற்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், சாதி இந்துக்கள், என்னென்ன முறைகளை கையாள முடியுமோ, அம்மக்கள் மீது பொருளாதாரத் தடை உட்பட, அனைத்தையும் பயன்படுத்துகின்றனர். உண்மை என்னெவென்றால், மோடியின் குஜராத், தலித், ஆதிவாசிகள், மற்றும் பிற்படுத்தப்பட்டோரை (முஸ்லீம்களைச் சேர்க்கவில்லை) இழிவாகக் கருதும் உயர்சாதி இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானது.

குஜராத்தில் கையால் மலம் அள்ளும்  தொழிலாளர்களின் நிலை பற்றி மோடி மற்றும் அவரது அரசிடம் கேட்கிற பொழுது, அவரும் அவரது முன்னோடிகளும் தங்கள் மாநிலத்தில் அப்படியொன்று இல்லையென மறுக்கின்றனர். உண்மையில், இந்த இழிவான நடைமுறை அகமதாபாத்தில் கூட காண முடிவதை அநேக அறிக்கைகளும் காணொளிகளும் புகைப்படங்களும் வெளிப்படுத்துகின்றன. இன்றும், குஜராத்தில் மனிதர்கள் மனித மலத்தை கையால் அள்ளுவதும், இம்மாநிலம் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்மாதிரி எனக் கூறிக் கொள்வதும் அம்மாநிலத்தின் முதல்வர், தன்னை இந்தியாவின் நாளைய பிரதமர் எனக் காட்டிக் கொள்வதும் வெட்கக் கேடானது. இவர் தன்னை இந்தியாவின் நாளைய பிரதமராக நினைத்துக் கொள்வதில் பிரச்சனையில்லை. ஆனால், குஜராத் மற்ற மாநிலங்களை விட வேறுபட்டது என ஏன் நம் எல்லோரையும் நம்பச் சொல்ல  வேண்டும்? ஆம்; குஜராத், வேறுபட்ட மாநிலம் தான்; ஏனெனில், சமூக மாற்றத்திற்கான உந்து விசைகள் செயலற்றும் மந்தமாக இருப்பதும் மதவாத, முதலாளித்துவ, உயர் சாதி கூட்டங்களுக்கு சுலபமாக இணங்கி நிற்பதும் குஜராத் தான்.

2011 மக்கள் தொகை கணெக்கெடுப்பின்படி, குஜராத்தில் 2,500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் கையால் மலம் அள்ளும் முறை (கைமுறை துப்புரவு) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. . இந்த எண்ணிக்கை எனக்கு ஆச்சரியமூட்டுகிறது. ஏனெனில், வெறும் 2,500 குடியிருப்புகளுக்கு கூட, மனித மலத்தை நீரால் அப்புறப்படுத்தும் கழிவறைகளை மேம்படுத்த, குஜராத் அரசிடம் நிதி வசதி இல்லை என்பதைத்தான் இந்த எண்ணிக்கை பிரதிபலிக்கிறது. உண்மையில், யதார்த்தம் இதைவிட பயங்கரமானது. இதே மக்கள் தொகை கணெக்கெடுப்பு, குஜராத்தின் 1.2 கோடி குடியிருப்புகளில், 64 இலட்சம் குடியிருப்புகளில் வடிகால் வசதி இல்லை என்பதைப் புலப்படுத்துகிறது. 52 இலட்சம் வீடுகளில் கழிப்பறை வசதி கிடையாது. எனவே, இவர்கள் அனைவரும் திறந்த வெளியிலோ அல்லது பொது கழிப்பிடங்களிலோ மட்டும்தான் மலம் கழிக்க முடியும். இதில் 49 இலட்சம் மக்கள், திறந்த வெளியில்தான் மலம் கழிக்கின்றனர் என்ற செய்தி ‘ஒளிரும் குஜராத்தின்’ தரத்தைப் புலப்படுத்தும். இம்மாநிலத்தில் வெறும் இரண்டு இலட்சம் பொதுக் கழிப்பறைகள்தான் உள்ளன. இம்மாநிலம்  தான் இந்தியர்களுக்கு ‘மாற்றத்தைக்’ கொடுக்க திட்டமிட்டிருக்கின்றது.

இப்புள்ளி விவரங்கள், தாங்களாகவே கணெக்கெடுப்பை நடத்தும் ஆய்வு நிறுவனங்களாலும் சமூக ஆர்வலர்களாலும் மிக சுலபமாக மறுக்கப்படுகின்றன. இவர்களது கணெக்கெடுப்பில் தேசிய சராசரியைப் போன்று பல்வேறு ஓட்டைகளையும் ஆதாரமற்ற தரவுகள் இருப்பதையும் நாம் எளிதாக சுட்டிக்காட்டினாலும் டாடா சமூக அறிவியல் நிறுவனத்தின் ஆய்வின்படி, குஜராத்தில் 12,506 கைமுறைத் துப்புரவாளர்கள் உள்ளனர். இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, குஜராத்தில், மொத்தமுள்ள 2,456 குடியிருப்புகளில் 12,506 தனிநபர்கள், கைமுறைத் துப்புரவில் ஈடுபட்டுவருகின்றனர். இதில் 4,333 (2,755 ஆண்கள், 1,578 பெண்கள்) நபர்கள் கைமுறைத் துப்புரவில் நேரடியாக ஈடுபட்டுவருகின்றனர். மீதமுள்ளவர்களில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், வேலையற்றோர் மற்றும் பிறர் அடங்குவர். பிராந்திய ரீதியாக, சவுராஷ்ட்ரா  வில் 928 குடியிருப்புகளிலும், மத்திய குஜராத்தில்  569 குடியிருப்புகளிலும், வடக்கு மற்றும் தெற்கு குஜராத்தில் முறையே 529 மற்றும் 430 குடியிருப்புகளிலும் இந்நடைமுறை உள்ளது. இதில், 50% மேற்பட்டோர், “வெறும் கைகளாலேயே” திறந்த வெளியில் கழிக்கும் மலத்தை அகற்றுவதில் ஈடுபட்டுள்ளனர். . உண்மையில் இந்த ஆய்வு, பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட முனிசிபல் கார்ப்பரேசன் பகுதிகளில்  மட்டும்நடத்தப்பட்டதாகும். எனவே இந்த ஆய்வு, சாதியப் பாகுபாடும் தீண்டாமையும் சரிக்குச் சரியாய் இயங்கும், கூடவே கையால் மலம் அள்ளுவதும் நடைமுறையில் இருக்கும் முனிசிபாலிட்டிகளின் எல்லைக்குள் வராத பெரும் எண்ணிக்கையிலான சிறு நகரங்களையும், கிராமங்களையும் கணக்கில் கொள்ளவில்லை.

நாம், இது போன்ற ஆய்வுகளை கண்டிப்பாக பாராட்டினாலும், உண்மையில் குஜராத் ஆழமான சாதிப்படி நிலையும், சாதிப் பாகுபாடும் மேலோங்கி நிற்கும் சமூகமாகும். அங்கு தாழ்த்தப்பட்டவர்கள் மிக அதிகமாக விலக்கி வைக்கப்படுகின்றனர். அவர்கள் கோயில்களில் கூட நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. எனினும் என்னைப் போன்றவர்கள், கோயில் நுழைவுப் போராட்டங்கள் (“தலித்-பூசாரி திட்டங்கள்”)  தாழ்த்தப்பட்டவர்களுக்கு உண்மையில் உதவுவதாக நம்புவதில்லை. மாறாக அவை பார்ப்பனீய சமூகத்தின் கீழ் அவர்களை அடிமையாக இருக்க வைப்பதோடு இல்லாமல் எப்படியாவது சாதிப்பாகுபாட்டின் அசிங்கமான நிதர்சனத்தை அவர்கள் மீது திணிக்கிறது.

குஜராத் தன்னிடத்தில் பணப்பஞ்சமில்லை என்று கூறிக் கொள்கிறது. மேலும் அது பொருளாதார ரீதியாகவும் ‘ஒளிர்ந்து’ கொண்டிருக்கிறது. அப்படியிருந்தும் இன்னும் ஏன் பெரும் எண்ணிக்கையிலான குஜராத்திகள் திறந்த வெளியில் மலம் கழிக்கின்றனர்? இது வெட்கக்கேடானது இல்லையா? இருப்பினும் இந்த திறந்தவெளி மலம் கழித்தலுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் உண்மை , அவ்வாறு திறந்தவெளியில் மலம் கழிப்பவர்களின் பொருளாதார நிலையாகும். ஆம்; இந்த மாநிலத்தில்தான் பெரும் எண்ணிக்கையிலான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடோடு இருக்கின்றனர். கூடவே, முதல் அமைச்சர், பார்க்க ஒல்லியாக இருக்க வேண்டும் என்பதற்க்காக தான் பெண்கள் குறைவாக உண்பதாக கூறுகிறார்.

நம்முன் இருக்கும் கேள்விகள்: குஜராத் அரசு அம்மாநிலத்தில் கைமுறைத் துப்புரவை ஒழிப்பதில் ஏன் தோற்றுப்போனது? இந்துதுவத்திட்டத்தில் சாதிப்பாகுபாடு மற்றும் தீண்டாமைக்கான விவகாரங்கள் எங்கு இருக்கிறது ?! ஒரு வேளை, இம்மாநிலம் இந்துதுவத்திற்கு முன்மாதிரி மாநிலமாக இருந்தால், பால்மீகியும் தாழ்த்ப்பட்டோரும் குஜராத்தில் எப்படி வாழ முடியும்?

பல வருடங்களுக்கு முன்பு, இந்திரா குடியிருப்பு திட்ட (Indira Avas Yojana) ஆய்வின்போது,  இத்திட்டத்தின் கீழ் பிற சாதி மக்களுக்கு வீடு வழங்கப்பட்ட பகுதிகளில் பால்மீகி மக்களுக்கு தரப்படுவதில்லை என்பதைக் கண்டறிந்தேன். உண்மையில், பிற சாதிகளுடன் பால்மீகி  ஒன்றுடன் ஒன்று கலந்துவிடாமல் இருக்க மோடியும் அவரது ஆதரவாளர்களும் பால்மீகி குடியிருப்பு திட்டத்தை (Balmiki Avas Yojana) உருவாக்கினார்கள். இத்திட்டத்தின் கீழ் ஒதுக்குப்புறமாக கிராமத்தின் கடைசிக்கோடியில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. குஜராத்தில் ஒரு பால்மீகி, படேலின் வீட்டிலோ அல்லது பார்ப்பானின் வீட்டிலோ நுழைய அனுமதிக்கப்படுவரா? சாதிகளின் பேரில் குஜராத்தில் கௌரவக் கொலைகள் நடைபெறுவதில்லையா? அனைத்து கோயில்களும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு திறந்துவிடப்படுகிறதா?

தற்போதைய கேள்வியே; மோடி ஏன் பால்மீகி அல்லது தாழ்த்தப்பட்டவர்கள் சமஸ்கிருதம் கற்று கொள்ள விரும்ப வேண்டும்? எத்தனை குஜராத் பிராமணர்கள் சமஸ்கிருதம் கற்றுக் கொண்டிருக்கின்றனர்? ஏன் இவர்களுக்காக பள்ளிக்கூடம் திறக்கக் கூடாது? மோடி, பால்மீகி மக்கள் கோயில்களில் பூசை செய்வதை விரும்புகிறார். ஒரு நல்ல யோசனையாக, கோயில்களையும், சோம்நாத், அம்பாஜி மற்றும் அக்ஷர்தாம் போன்றவற்றின் கோயில் நிர்வாகங்களையும் பால்மீகி மக்களிடம் ஒப்படைக்கலாம். இதனால் அவர்களுக்கு குடும்பத்தை நடத்தும் அளவிற்கு  போதிய வருவாயும் கிடைக்கும்; பிறருக்கும் சேவை செய்யலாம். தாழ்த்தப்பட்ட மற்றும் பிற சமூகங்களுக்கு, இன்றைய தேவையாக இருப்பது நவீன கல்வியும் தரமான பல்கலைக்கழகங்களில் வாய்ப்பும் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புமே ஆகும். மோடியின் ‘தொழில்துறை குஜராத்’, பல்கலைக்கழக வளாகங்களிலும் கல்லூரிகளிலும் கம்பெனிகள் மற்றும் தொழிற்சாலைகளிலும் சாதிப்பாகுபாட்டை ஒழித்தாலே, அது மிகப்பெரும் சாதனையாகும்.

‘தலித்-பூசாரி’ போன்ற திட்டமெல்லாம், தீண்டாமை மற்றும் சாதிச்சமூகத்தின் உண்மையான  பிரச்சனைகளை மூடி மறைக்கும் திட்டவட்ட முயற்சியாகும். இது போன்ற உண்மைகளை மறைப்பதற்கு, சாதியச் சக்திகள் நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும். எனவே தான் ‘தலித்-பூசாரி’ போன்ற எளிய இலக்குகளைத் அது தேர்ந்தெடுத்திருக்கிறது. இவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும்; பால்மீகியோ அல்லது தாழ்த்தப்பட்டவர்களோ பூசாரியானாலும் கூட அவர்கள் கலப்புத்திருமணங்கள் செய்து கொள்ளவதற்க்கு இவைகள் அனுமதிக்கப் போவதில்லை.  மேலும், அனைத்து  திருமண விழாக்களுக்கு செல்வதை கூட இவைகள் அனுமதிக்க போவதில்லை.  பெரும்பாலோனோர் தங்களது சாதிகளுக்குள்மட்டுமே சடங்குகளை நடத்த அனுமதிக்கபடுவர். இல்லையேல், பிராமணர்கள் செல்ல மறுக்கின்ற சடங்குகளை இவர்கள் நடத்தலாம். . கோயில்களைப் பொருத்தவரையில், நூற்றுக்கணக்கான கோயில்களுக்கு யாருமே வருவதில்லை. மேலும் வருவாய் உள்ள கோயில்கள் அனைத்தும் சாதி இந்துக்களின் பிடியில் இருப்பதால் பெரும்பாலான கோயில் பூசாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.

மக்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான வரலாற்று அநீதி குறித்து கேள்வி எழுப்பமாட்டார்கள் என்பதற்காக, நரேந்திர மோடி, இது போன்ற வக்கிரமான முறைகளின் மூலம் முயற்சி செய்துகொண்டிருக்கிறார். அடிப்படையில் அவர், தாழ்த்தப்பட்ட மக்களின் கண்ணியத்தை குலைக்கவே முயற்சிக்கிறார். ஒரு வேளை இவருக்கு பால்மீகி மக்கள் மீது அக்கறையிருந்தால், குஜராத்தில் தினசரி ஆணையாக இருக்கும் தீண்டாமை பற்றியோ சாதிப்பாகுபாடு குறித்தோ என்றைக்காவது பேசியிருக்கிறாரா?

கோயில் நுழைவுப் போராட்டங்களும் தலித்-பூசாரி திட்டங்கள் மூலம் மக்களை மீண்டும் மதச் சடங்குகளுக்குள் ஆழ்த்துவதும், ஆதிக்க சாதி மேட்டுகுடிகளால் நடத்தப்படும் வக்கிரமான நடைமுறையும் மோசடியும் அன்றி வேறில்லை. இவை யாவும், அதிகார வர்க்கத்தினரால்  தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராகச் செய்த வேலைகளையும், அம்மக்களுக்கு எதிராக நடைபெறும் பாரிய மனித உரிமை மீறல்களை கண்டிக்க வக்கற்று இருக்கும் அசிங்கமான உண்மைகளை மூடி மறைப்பதற்காகவும் செய்யப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு, மற்றுமொரு ‘புரட்சியாளர்’ பால்மீகி சமூக பெண்ணை கங்கையில் நீராடுவதற்காக கும்பமேளாவிற்கு கூட்டிச் சென்றார்.  கங்கையில் குளித்ததின் மூலம் இந்த சமூக அமைப்பிற்க்கு அவர்கள் சவால் விட்டுள்ளனர் என்று பெருமை கொண்டாடினர். ஆனால், இதே வெற்றியாளர்கள் கும்பமேளாவில் பணியாற்றிய ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட மனித மலத்தை கையால் அள்ளுபவர்களுக்கு (தோட்டிகளுக்கு) நிகழ்த்தப்பட்ட கொடுமையான மனித உரிமை மீறலையும் அவமரியாதையையும் பற்றி கவலைப்படவில்லை.  மனித சமூகத்திற்க்கும் மனித உரிமைக்கும் எதிரான பிரிவினைவாத தத்துவத்தை அடிப்படை கொண்டுள்ள  வர்ணாசிரம தர்மத்தை கேள்விக்கு உட்படுத்தாமல்  இது போன்ற செப்பிடு வித்தைகளாலும் ஏமாற்று வழிகளாலும் தீண்டாமை மற்றும் சாதிப்பாகுபாட்டின் பிரச்சனைகளைத் தீர்க்க இயலாது.

யாரெல்லாம் சாதீய வைதீக முறைகளை நம் மீது திணிக்க முயல்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் நம் மீது அன்பும், மனித உரிமை மீது மதிப்பும் கிடையாது. அதனால் தான் குஜராத் அரசாங்கத்தின் ‘தலித்-பூசாரி’ திட்டம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரானதன்றி வேறொன்றுமில்லை. சாதிச்சமூகத்தையும் சாதிப்பாகுபாடுகளையும் அழித்தொழிக்காமல் இத்திட்டம், அம்மக்களை இந்து என்னும் ஓரே குடைக்குள் வைக்க விரும்பும் அப்பட்டமான கபடநாடகமாகும். சாதிச்சமூகத்தை உடைத்தெறியாமல் சமத்துவத்தின் வழியிலான மனித சமுதாயத்தை அமைக்க இயலுமா? மோடி, சாதி முறையை ஒழிக்க விரும்புகிறாரா? அல்லது இன்னும் ஒவ்வொருவர் மீதும் தனது கொள்கைகளை நிலைத்திருக்கச் செய்ய விரும்புகிறாரா?

நெடுங்காலமாக பால்மீகி மக்களுக்கும் பிற தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இழைக்கப்பட்டுவரும் சாதிப்பாகுபாட்டிற்காகவும் தீண்டாமைக்காகவும் மோடி எப்பொழுதாவது வருத்தம் தெரிவிப்பாரா? காவிப்படையையும் இந்துத்துவ கருத்தியலையும் பிரதிநிதிப்படுத்துவதாகக் கூறிக் கொள்ளும் மோடி ‘தெய்வ அங்கீகாரம்’ கிடைக்கும் இச்செயலைச் செய்ய முன்வருவாரா?

இக்கட்டுரை, சமூக மற்றும் மனித உரிமை ஆர்வலரான வித்யா பூஷன் ராவட்டால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, countercurrentsல்  வெளியிடப்பட்டது. 

நன்றி :Related Post :

 

1 comment:

  1. நல்ல பதிவு:!
    இவர்களுக்கு என்று விடிவோ மற்றும் என்று எல்லா மக்களுக்கும் கழிப்பிடம் இந்தியாவில் கட்டப்ப்டுகிறதோ அன்று தான் இந்தியா முதல் அடி எடுத்து வைக்கும்--வல்லரசு ஆகும் கொள்கையில். அது வரை என்ன செய்தாலும் நடக்காது!

    ReplyDelete